வெள்ளி, 11 மார்ச், 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு.

(கடந்த திங்கள் 7, மார்ச் அன்று ராமேஸ்வரத்து கடைகளில் தொங்கிய தினகரன் செய்தியிலிருந்து கீழே)

ராமேஸ்வரம், மார்ச், 7: கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து 572 விசைப்படகுகள் நேற்று முன்தினம் காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றன. 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது 5 பைபர் படகுகளில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். குறைந்தளவு மீன்களுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர்.

கோடியக்கரை அருகே: நடுக் கடலில் மீனவர்களிடமிருந்து மீன்கள் பறிமுதல்

ேதாரண்யம், மார்ச் 10: கோடியக்கரைக்கு அருகே நடுக் கடலில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், பொருள்களை புதன்கிழமை இரவு பறித்துச் சென்றவர்கள் இலங்கை மீனவர்களா என்பது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஆ. சுரேஷ் (26), புதுப்பேட்டை பகுதி மு. முத்துராசன் (18), முத்துத்துரை (43) ஆகிய மூவரும் நாகை மாவட்டம், கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

கோடியக்கரையிலிருந்து செவ்வாய்க்கிழமை பகலில் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் கடலுக்குச் சென்றனர். அவர்கள் மூவரும் புதன்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மூன்று படகுகளில் வந்த 7 பேர், அந்த மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், இடுப்பில் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலி உள்பட மீன்பிடி உபகரணங்களைப் பறிமுதல் செய்து, எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மீனவர்கள் மூவரும் வியாழக்கிழமை பிற்பகல் கரைக்குத் திரும்பினர். படகுகளில் வந்து பொருள்களை பறித்துச் சென்றவர்கள் இலங்கை மீனவர்களாக இருக்கலாம் என கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், கோடியக்கரையில் மீன் வளத் துறையினர், போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

First Published : 11 Mar 2011 11:21:46 AM IST
Source: http://www.dinamani.com/

புதன், 9 மார்ச், 2011

மீனவர் ராஜா முகமது.

கடந்த மாதம், 'இலங்கை கடற்பரப்பில்' மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், 'ஈழத்து மீனவர்களால் சிறைபிடிக்கப் பட்ட' செய்தியை நாம் அறிவோம். முதலில் 106 மீனவர்களும், தொடர்ந்து இன்னமும் 22 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டதாக செய்தி வந்தது. இந்த சிறைபிடிப்பிற்கு உந்துதலாகவும், பின்னியக்கும் சக்தியாகவும் இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இருந்ததாக பரவலாக நம்பப் படுகிறது.  செய்தி வாசிக்கும் பொது மனத்தால் இதில் அதிகம் கவனம் செலுத்தப் படாத செய்தி, சிறை பிடிக்கும் போது தப்பிக்க முயன்ற மீனவர்களின் படகுகள் மீது, பெட்ரோல் வெடிகுண்டுகளை இலங்கை மீனவர்கள் வீசி தாக்கியது.

இந்த செய்திகளின் பின்னால், நாம் கவனத்திற்கு வரவே வராத சம்பவம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜா முகமது என்பவர், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் சிக்கி, பாதிக்கப்பட்டு, தீவிர தீக்காயங்களுடன் படுக்கையில் இன்னமும் போராடி வருவது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது போன்ற மற்ற செய்திகளில் இவர் மறக்கப்பட்டு விட்டார். 

அரசு தரப்பில் அவருக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக செலவு செய்து, மேலும் செலவு செய்து,  அவரை கவனிக்கும் வசதியில்லாமல் வேறு ஒரு இடத்தில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

மீனவர்கள் கொல்லப்பட்டால் கிடைக்கும் நஷ்ட ஈடும், கவனமும் காயம் பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நடைமுறையில் பாதிக்கப்பட்ட ராஜாமுகமதை அவரது வீட்டில், அண்மையில் மீனவர் நிலை குறித்து அறியும் நோக்கத்துடன் பயணம் சென்ற நாங்கள், தோழர் ராமநாதன் உதவியுடன் சந்தித்தோம்.  அவரது நிலை மனதை உருக்கக் கூடியதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக (கேசட் காலியானதால்) வீடியோ எடுக்க இயலவில்லை. புகைப்படம் எடுத்ததுடன், அவரது பேச்சை அலைபேசியில் பதிவு செய்தோம்.




இந்த இடத்தில் குறைந்த பட்ச சரியான நியாயம் என்பது இலங்கை அரசு ராஜா முகமதிற்கு தேவையான மருத்துவ செலவுகளையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டதற்கான நஷ்ட ஈட்டையும் வழங்க வேண்டும். மேலும் அவரது ஒரு கை அசைக்க இயலாத நிலையில் இருப்பதால்,  அவர் மீண்டும் தொழிலுக்கு போக இயலுமா என்பதும் கேள்விக்குறியே. இதற்கான இழப்புத் தொகையையும் இலங்கை அரசு அளிப்பதே சரியான நீதியாக இருக்கும். 

நமக்கு வாய்த்த மாநில, மத்திய அரசுகள் இருக்கும் லட்சணத்தில் இப்படி ஒரு நியாயமும் நீதியும் கிட்டுவதற்கு முயற்சிக்கும் லட்சியக் கனவு கூட நாம் காண இயலாது. மத்திய அரசும் இதுவரை (நேரில் விசாரித்த வகையிலும்) எந்த உதவியும், இழப்பீடும் அளித்ததாக கேள்விப்பட்டது இல்லை. இந்நிலையில் தமிழக அரசை நோக்கி ராஜா முகமதிற்கு உதவுவதற்கு கோரிக்கை வைப்பதும், நிர்பந்திப்பதுமே நாம் முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் உள்ள செயல். தமிழக அரசு எவ்வளவு கையாலகாமலும், துரோக தன்மையும் கொண்டதாயினும், தன் அரசியல் சுய நலம் கருதியாயினும் பாதிக்கப்பட்ட மீனவர்க்கு உதவும் சாத்தியம் உள்ளது.

பாதிக்கப்படும் மீனவர்களுக்கு எல்லாம் நாம் உதவ நினைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. மேலும் நம்முடைய அரசியல் செயல்பாடு இந்த அநியாயங்களுக்கு நீதி கிட்டுவதாகவும், அநியாயங்களை எதிர்காலத்தில் தடுப்பதாகவும் இருக்க வேண்டுமே தவிர, பாதிக்கப்பட்ட மீனவர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி செய்வதாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.

ஆனால் சில பாதிக்கப்பட்ட ராஜா முகமதிற்கு இத்தகைய அரசியல் நிலைபாடுகளை விட வசதியுடையவர்கள் அளிக்கும் உதவி பயனுள்ளதாக இருக்கக் கூடும். ஆகையால் இந்த பதிவை வாசிக்கும் நல்ல மனம் கொண்டவர்கள் ராஜமுகமதிற்கு உதவ விரும்பினால் என்னையோ, மா,சிவக்குமாரையோ அணுகலாம்.

குறிப்பிட்ட அளவு நண்பர்கள் நிதியுதவி அளிக்க முன்வந்தால், நேரடியாக மீண்டும் ஜெகதாபட்டினம் சென்று, ராஜா முகமதின் துணையாரிடம் நிதியை அளிக்க முடியும். உதவுபவர்களின் விபரங்கள், அளித்த தொகை வெளிப்படையாக அறிவிக்கப்படும். 

உதவ விரும்புபவர்கள் என்னை அல்லது மா.சிவக்குமாரை தொடர்பு கொள்ள:

அலைபேசி எண்: 8489681589

மின்னஞ்சல்: rosavasanth at gmail dot  com , masivakumar at gmail dot com

8489681589

தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டிய அலைபேசி எண் 8489681589 இப்போது செயல்படுகிறது.

செவ்வாய், 8 மார்ச், 2011

கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 படகுகளின் மீன் வலை அறுப்பு

இன்று (மார்ச் 8, 2011) கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப் பட்டிணத்தைச் சேர்ந்த 4 விசைப்படகுகளின் வலைகளை அறுத்து விட்டார்கள் இலங்கை படையினர்.

ஒவ்வொரு வலையும் சுமார் 50,000 ரூபாய் மதிப்பிலானவை. இன்றைய வருமானத்தை இழந்த மீனவர்கள்,  புதிய வலைகள் வாங்கிய பிறகுதான் இனிமேல் தொழிலுக்குப் போக முடியும்.

மீனவர்களின் பெயர்கள், நடந்த இடம் போன்ற மேல் விபரங்களைக் கேட்டுள்ளோம்.