இந்த தளம் குறித்து.

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதற்கான காரணங்களாக எதிர்தரப்பில் முன்வைக்கப்படும் நியாயங்களும் வாதங்களும் எதுவாக இருந்தாலும், இது அடிப்படையில் மானுட விரோதத் தன்மை கொண்ட, அடிப்படை மனிததன்மையற்ற, எந்த சமூகத்தின் பார்வையின் அறத்திலும் எதிர்க்கப் படவேண்டியதாக உள்ளது.

இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு நேரப்படும் துன்பங்களின் உச்சப் புள்ளியாக, அது கொலையில் முடிவுறும்போது மட்டுமே அது ஒரு செய்தியாக மாறுகிறது. அதுவும் இப்போதுதான் நிகழ்கிறது. 90களில் கூட மீனவர் சுடப்பட்டு இறப்பது, தினத்தந்தி போன்ற வெகுஜன பத்திரிகையில் மட்டுமே வரும் செய்தியாக இருந்தது. அப்போதய தமிழ் நாட்டு ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு இந்த செய்திகள் தீண்டத்தகாததாக இருந்தன.

ஓரளவு ஆறுதல் அளிக்கும் இன்றய சூழலிம், கொலைச் சம்பவங்கள் தவிர, வலையை அறுத்தல், பச்சை மீனை/உப்பை திங்க வைப்பது, பிடித்த மீன்களை அள்ளிக் கொண்டு போதல், GPS போன்ற கருவிகளை பறித்தல், அடித்து உடல் ரீதியாக துன்புறுத்துதல், படகை சேதம் செய்தல், கட்டாய ஒருபாலின கலவியில் ஈடுபட வைத்தல் போன்றவை செய்திகளாக மாறுவதில்லை. இத்தகைய எல்லா செய்திகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் இந்த தளம் தொடங்கப்பெற்றுள்ளது.

தமிழக மீனவர் மீதான அத்துமீறல்களாக எந்த சம்பவம் நடந்தாலும், இந்த தளத்திற்கான எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சம்பவம் குறித்த காலம், இடம் போன்ற குறைந்த பட்ச தகவல்கள் இருப்பது அவசியம். செய்தி அளிப்பவரின் அடிப்படை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்பு செய்தி வலையேற்றப்படும். மற்றபடி செய்திகள் அளிப்பவரின் பார்வையில் அவரில் மொழிதலில் பதியப் பெறுபவை.

அண்மையில் மீனவர் பிரச்சனையை நேரில் புரிந்து கொள்ளும் முயற்சியாக நாகப்பட்டினம் தொடங்கி ராமேஸ்வரம் வரை பல மீனவ கிராமங்களில் பயணித்த போது, இந்த எண்ணை சில மீனவர்களிடமும், மீனவ தலைவர்கள், களப்பணியாளர்களிடமும் அளித்துள்ளோம். இவை தவிர தனிப்பட்ட முறையில் உங்களுக்கு கிடைக்கப்பெறும் செய்திகளையும் இங்கே அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண் 8489681589.

மின்னஞ்சல் முகவரிகள்: masivakumar at gmail dot com அல்லது rosavasanth at gmail dot com

(at என்பது @ஐ குறிக்கும் என்பதும், dot என்பது .ஐ குறிக்கும் என்பதும் சொல்ல வேண்டியதில்லை.)

http://tnmeenavar.blogspot.com/