வலைப்பதிவு பின்னணி

நாகப்பட்டினம், ஜெகதாபட்டிணம், ராமேசுவரம் பகுதி மீனவர்கள் சிலருடன் பேசிய போது, இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை காவல் துறையோ மீன்வளத் துறையோ முறையாகப் பதிவு செய்வதில்லை என்று பலர் சொன்னார்கள். 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு முறையான முதல் தகவல் அறிக்கை இல்லை என்பதும் தெரிய வந்தது.

உயிர்க் கொலைகளைத் தவிர்த்து நாள் தோறும்,

  • வலைகளை அறுத்தல்
  • மீன்களைத் தூக்கிக் கடலில் போடுதல்
  • அடித்தல்
  • உடல் ரீதியாக சித்தரவதை செய்தல்
  • மீன்பிடி கருவிகளை கவர்ந்த செல்லுதல்
போன்ற நிகழ்வுகள் ஆயிரக்கணக்கில் நடக்கின்றன. இவை பதிவு செய்யப்படாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடோ நியாயமோ கிடைக்காமல் போகிறது.

இதை நிவர்த்தி செய்ய, செல் பேசி மூலம் தகவல் சொல்லி விட்டால், அதை உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்வதாக திட்டமிட்டு, அதற்கான ஒரு தொலைபேசி எண்ணையும் ஏற்படுத்தினோம். இந்த எண்ணை சந்தித்த மீனவர்கள், பிரதிநிதிகளிடம் கொடுத்து பரவலாக்கும்படி கேட்டுக் கொண்டோம்.

8489681589 என்ற இந்த எண்ணுக்கு வரும் தகவல்களை http://tnmeenavar.blogspot.com/ என்ற வலைப்பதிவில் இடுகைகளாக வெளியிடுவதாக திட்டம்.

இந்த எண்ணில் வரும் தகவல்களைக் கேட்டு பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் மின்னஞ்சலில் (masivakumar at gmail dot com அல்லது rosavasanth at gmail dot com) தொடர்பு கொள்ளுங்கள். நாம் முறை வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் அழைப்பவர்களிடம் பேசி தகவல் திரட்டுவதாக ஏற்பாடு செய்து கொள்ளலாம்.